×

அக்னி நட்சத்திரத்தை ஒட்டி சிவன் கோயில்களில் தாராபிஷேகம் 29ம் தேதி வரை நடைபெறும்

செய்யாறு, மே 5: அக்னி நட்சத்திரத்தையொட்டி சிவன் கோயில்களில் தாராபிஷேகம் தொடங்கியது. இந்த அபிஷேகம் வரும் 29ம் தேதி வரை நடைபெறும். கத்தரி வெயில் எனப்படும் அக்னி நட்சத்திரம் நேற்று தொடங்கியது. அக்னி நட்சத்திர நாட்களில் வெயிலின் தாக்கம் மேலும் அதிகரிக்கும் வாய்ப்புள்ளது. கத்திரி வெயிலின் தொடக்கமான 15 நாட்கள் அதிக வெயிலும், பின் கத்தரி எனப்படும் அக்னி நட்சத்திர கடைசி 10 நாட்களில் வெயிலின் தாக்கம் குறைவாகவும் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், அக்னி நட்சத்திரத்தை முன்னிட்டு, இறைவனின் திருமேனியை குளிர்விக்கும் விதமாக, அக்னி தோஷ நிவர்த்தியாக சிவன் கோயில்களில் தாராபிஷேகம் நேற்று தொடங்கியது. அக்னி நட்சத்திரம் முடியும் 29ம் தேதி வரை தாராபிஷேகம் நடைபெறும்.

அதையொட்டி, தினமும் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை, சுவாமி சன்னதி கருவறையில் இறைவனின் திருமேனியை குளிர்விக்கும் வகையில், தாரா பாத்திரம் பொருத்தப்பட்டு, வாசனை திரவியங்கள் சேர்க்கப்பட்ட புனித நீர், இறைவனின் திருமேனியில் துளித்துளியாய் சிந்தியடி குளிர்விக்கும் என சிவாச்சாரியார்கள் தெரிவித்தனர்

செய்யாறு:
செய்யாறு அருகே கூழமந்தல் கிராமத்தில் உள்ள நட்சத்திர விநாயகர் கோயிலில் அக்னி நட்சத்திரம் ஆரம்பித்ததை முன்னிட்டு அக்னி பகவானுக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனைகள் நடந்தது. அக்னி பகவானுக்கு நேற்று காலை பால், தேன், இளநீர், பன்னீர் உள்ளிட்ட நறுமண பொருட்களால் அபிஷேகம் நடந்தது, தொடர்ந்து அக்னி பகவானுக்கு அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாரதனை காண்பிக்கப்பட்டது. இந்நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அக்னி பகவானை வணங்கிச் சென்றனர்.

கண்ணமங்கலம்:
கண்ணமங்கலம் அடுத்த கொளத்தூர் ஏகாம்பர ஈஸ்வரர், காசி விஸ்வநாதர் இரட்டை சிவாலயத்தில் நேற்று தாராபிஷேகம் தொடங்கியது. இந்து சமய அறநிலையத்துறைக்கு உட்பட்ட பழமையான கொளத்தூர் இரட்டை சிவாலயத்தில் நேற்று அக்னி நட்சத்திரத்தையொட்டி தாராபிேஷகம் தொடங்கியது. இதன்படி, மூலவர்கள் ஏகாம்பர ஈஸ்வரர், காசி விஸ்வநாதருக்கு பன்னீர், பால், தயிர், தேன், சந்தனம், இளநீர் உள்ளிட்டவற்றால் சிறப்பு அபிஷேகம், மகா தீபாராதனை நடந்தது.

அக்னி நட்சத்திர நாட்கள் முழுவதும் சுவாமியை குளிர்விக்கும் வகையில், தாரா பாத்திரத்தில் நிரப்பப்பட்ட பன்னீர், ஏலக்காய் உள்ளிட்ட வாசனை திரவியங்கள், சிவலிங்கத்தின் மீது இடைவிடாது காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை, துளி துளியாக விழும் படியான தாராபிஷேகத்திற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. வரும் மே 25ம் தேதி வரை நடைபெறும் தாராபிஷேகத்திற்கு, பன்னீர் உள்ளிட்ட வாசனை திரவியங்கள் தர விரும்பும் பக்தர்கள் அளிக்கலாம். தாராபிஷேகம் நடைபெறும் நாட்களில் நாக அபரணம் மற்றும் தலைமுடி அணிவிக்கப்படாது என விழக்குழு தலைவர் சிவ.கே.என்.சரவணன் மற்றும் சிவனடியார்கள் தெரிவித்துள்ளனர்.

The post அக்னி நட்சத்திரத்தை ஒட்டி சிவன் கோயில்களில் தாராபிஷேகம் 29ம் தேதி வரை நடைபெறும் appeared first on Dinakaran.

Tags : Shiva temples ,Agni Nakshatra ,Seyyar ,Shiva ,Kathari Veil ,Dinakaran ,
× RELATED சுட்டெரிக்கும் கோடை வெயிலில் இருந்து...